‘7 நாட்கள்’ திரைப்பட தொடக்க விழா!

‘7 நாட்கள்’ திரைப்படத்தின் பூஜை, தொடக்க விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேப்-ல் நடைபெற்றது. இதில் பிரபல இயக்குனர் பி.வாசு,  நடிகர்கள் சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் நிகிஷா படேல், அங்கனா ராய், படத்தின் இயக்குனர் கௌதம், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0a1j

இயக்குனர் பி.வாசு பேசுகையில், “7 நாட்கள்’ திரைப்படத்தின் கதை மிக சிறந்த கதையாகும். இப்படத்தின் இயக்குனர் கௌதம் தயாரிப்பாளர் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு படம் இயக்க வேண்டும்.

“இன்றைய இளைஞர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு, அதை தங்கள் திறமைக்கு சான்றாக எடுத்துக்கொண்டு வருகின்றனர். ஆனால், எங்கள் காலத்தில் அப்படி ஒரு சூழல் இருந்தது இல்லை. இயக்குனர் ஸ்ரீதரிடம் நான் உதவி இயக்குனராக வேலை செய்தபோது, அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான ஒரு விஷயமாக இருந்தது.

“நான் இப்போது சக்திவேல் வாசு நடிக்கும் படங்களின் கதைகளைக் கேட்பது இல்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பற்றி மட்டும் நான் தெரிந்துகொள்வது உண்டு” என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், “நானும் திரைக்கதை ஆசிரியர் விமலும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து நண்பர்கள். அவருடைய மகனின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ‘அபியும் நானும்’ படத்திலேயே கணேஷ் வெங்கட்ராமுடன் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது” என்றார்

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு பேசுகையில், “இயக்குனர் எப்போதும் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும்போது அருமையான படைப்பாக ஒரு திரைப்படம் வெளிவரும். இப்படத்தின் இயக்குனர் கௌதமும் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் ஒரு நபர் தான்” என்றார்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், “எனக்கு எப்போதும் நல்ல கதைகளில் பணியாற்றுவது தான் பிடிக்கும். அந்த வகையில் இது மிக சிறந்த கதை எனலாம். பிரபு சாரின் பிரேமுக்கு இசையமைக்க ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.