60 வயது மாநிறம் – விமர்சனம்
கமர்ஷியல் நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பள்ளிக்கூட காதல், கல்லூரிக் காதல், ரவுடி காதல், வேலையில்லாத ஊர்சுற்றியின் காதல், ஐ.டி. துறையினர் காதல் என்றெல்லாம் இளைஞர்களை இலக்காக வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா, முதியோரை கைவிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. முதியோரை, அவர்களது பிரச்சனைகளை, அவர்களை உறவுகளும் சமூகமும் அரவணைக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்லாத, சொல்ல இடமில்லாத இன்றைய தமிழ்ச்சினிமா சூழலில், ஒரு விதிவிலக்காக, அபூர்வமாகப் பூக்கும் குறிஞ்சி மலராக படைக்கப்பட்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ராதாமோகன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா நடிப்பில் வெளியாகியிருக்கும் ’60 வயது மாநிறம்’ அந்த வகையில், தமிழ்ச்சினிமா சொல்ல மறந்த கதை இது.
சாலையோர சுவர்களில், ஏதோவொரு முதியவரின் புகைப்படத்துடன், ‘காணவில்லை, இத்தனை வயது, இனன நிறம், தகவல் கொடுப்போருக்கு சன்மானம்’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அடிக்கடி உங்கள் பார்வையில் பட்டிருக்கும். அது தான் ’60 வயது மாநிறம்’ படத்தின் கதைக்கரு.
ஓய்வுபெற்ற கணிதப் பேராசிரியர் பிரகாஷ்ராஜ். வயது 60. மனைவியை இழந்த அவர், தன் ஒரே மகன் விக்ரம் பிரபுவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முதுமை காரணமாக அவருக்கு ‘அல்சைமர்’ என்ற ஞாபகமறதி நோய் ஏற்ப்டுகிறது. தான் யார் என்பதையும், சற்றுநேரத்துக்கு முன் தான் செய்தது என்ன என்பதையும்கூட மறந்துவிடும் பரிதாப நிலைக்கு அவர் உள்ளாகிறார்.
மென்பொறியாளராக இருக்கும் மகன் விக்ரம் பிரபு, பதவி உயர்வு காரணமாக மும்பை செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், நாயகி இந்துஜா மருத்துவராகப் பணிபுரியும் ‘அல்சைமர் நோயாளிகளுக்கான சிறப்பு காப்பக’த்தில் பிரகாஷ்ராஜை சேர்த்துவிட்டு அவர் மும்பை செல்கிறார்.
சில மாதங்களுக்குப்பின் சென்னை திரும்பும் விக்ரம் பிரபு, ஷாப்பிங்குக்காக பிரகாஷ்ராஜை காப்பகத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்கிறார். அவரது கவனக் குறைவு காரணமாக பிரகாஷ்ராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரை விக்ரம் பிரபு இந்துஜாவுடன் சேர்ந்து தேடி அலைகிறார்.
காணாமல்போன பிரகாஷ்ராஜ் கால்போன போக்கில் திரிகிறார். ஒரு தாதாவின் உத்தரவின் பேரில் அவரது அடியாளான சமுத்திரக்கனி ஓர் அரசு அதிகாரியை கொலை செய்துவிட்டு சடலத்தைப் புதைக்க முயன்றுகொண்டிருக்கையில், பிரகாஷ்ராஜ் தற்செயலாக அங்கு வந்து சேருகிறார். அவரது ஞாபகமறதி பற்றி தெரியாத சமுத்திரக்கனி டென்ஷன் ஆகிறார்.
அப்போது போலீசார் அங்கு வர, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, குமரவேல் – மதுமிதா தம்பதியரை மிரட்டி, வெட்டவெளியில் ஒற்றையாக இருக்கும் அவர்களது வீட்டில் பிரகாஷ்ராஜுடன் தஞ்சம் அடைகிறார் சமுத்திரக்கனி.
அரசு அதிகாரி கொலை விவகாரம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பிரகாஷ்ராஜை கொன்றுவிடும்படி சமுத்திரக்கனிக்கு தொலைபேசியில் கட்டளையிடுகிறார் தாதா. பிரகாஷ்ராஜை சமுத்திரக்கனி கொலை செய்தாரா? பிரகாஷ்ராஜை தேடி அலையும் விக்ரம் பிரபு அவரை உயிருடன் கண்டுபிடித்தாரா? என்பது விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதை.
‘கோதுமை நிறம், சராசரி உடல்வாகு’ என பொருள்தரும் ‘கோதி பன்னா சாதாரண மைக்கட்டு’ என்ற கன்னடத் தலைப்பில் கர்நாடகத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பையும், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். தமிழ் ரசிகர்களின் தேவைக்கு ஏற்ப சிற்சில மாறுதல்களுடன் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். விரசம் துளியுமின்றி மெல்லிய உணர்வுகளுக்கும், உறவுகளின் மேன்மைக்கும் தன் படங்களில் முக்கியத்துவம் அளிக்கும் ராதாமோகன் இப்படத்திலும் அதை சாதித்துக்காட்டி உயர்ந்து நிற்கிறார்.
கன்னட படத்தில் முதுபெரும் நடிகர் அனந்த்நாக் ஏற்ற முதியவர் பாத்திரத்தை இந்த தமிழ்ப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஏற்றுள்ளார். வெள்ளந்தியான சிரிப்பு, தளர்ந்த நடை, கண்களில் தெரியும் சாந்தம், அலட்டாத உடல்மொழி என முதுமைப் பருவ அல்சைமர் நோயாளியாக மிகை இல்லாமல் வெளுத்துக் கட்டியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறு எந்த நடிகரும் இத்தனை சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.
தந்தையைத் தொலைத்துவிட்டு பதட்டத்துடன் அவரை தேடி அலையும் மகன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு. இதுவரை அவர் ஏற்ற கதாபாத்திரங்களில் இது முற்றிலும் வித்தியாசமானது. கோபத்தில் குமுறுவது, அன்பில் உருகுவது, தந்தையைத் தொலைத்துவிட்டு அவரை நினைத்துப் புலம்புவது என பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பொறுப்புள்ள மருத்துவராக வரும் நாயகி இந்துஜா இயல்பாய், அழகாய் நடித்திருக்கிறார். மிகையான மேக்கப்பை அவர் தவிர்த்திருக்கலாம்.
மனிதநேயம், செஞ்சோற்றுக் கடன் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கொலையாளியாக, கொடூரமான தாதாவின் அடியாளாக வருகிறார் சமுத்திரக்கனி. வழக்கம் போல் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தங்கள் வீட்டுக்குள் வலிய வந்து தஞ்சம் புகுந்துகொண்ட கொலையாளி மற்றும் அல்சைமர் நோயாளி ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு அல்லாடும் குமரவேல் – மதுமிதா தம்பதியர், நகைச்சுவையை வாரி இறைத்திருக்கிறார்கள்.
சமுத்திரக்கனியின் உதவியாளனாக வரும் ‘கலக்கப்போவது யாரு’ சரத் நல்ல அறிமுகம். அவரும் தன் பங்குக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்.
காப்பகத்தில் இருக்கும் ராம் – மரியா – ஜானி மூன்று பேருக்குமான பிணைப்பு, பிரகாஷ்ராஜ் சொல்லும் வெள்ளை நாய் – கருப்பு நாய் கதை, தந்தையின் காதலை தனயனிடம் இந்துஜா சொல்லும் கவித்துவமான காட்சிகள், பெரியவரைத் தேடி அலைகையில் விக்ரம் பிரபுவுக்கும் இந்துஜாவுக்கும் இடையே மென்மையாய் முகிழ்க்கும் காதல், கிளைமாக்ஸில் விக்ரம் பிரபு தன் காதலை தெரிவிக்கும் விதம் போன்றவை ரசிப்புக்கும் பாராட்டுக்கும் உரியவை.
விஜியின் வசனங்கள், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.
’60 வயது மாநிறம்’ – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அவசியம் குடும்பத்தோடு சென்று கண்டு மகிழலாம்.