பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் பஸ்களுக்கு மொத்தமாக தீ வைப்பு!
காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது.
தமிழர்கள் நடத்தும் கடைகளிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீதும் கல் வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் வன்முறை ஓயவில்லை. இந்த வன்முறையின் உச்சகட்டமாக, தமிழகத்தைச் சேர்ந்த 50 தனியார் பேருந்துகள் மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மைசூர் – பெங்களூர் சாலையில் உள்ள நயன்தனஹள்ளி என்ற இடத்தில் உள்ள பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கே.பி.என், மற்றும் எஸ்.ஆர்.எஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான 50 பேருந்துகள், கன்னட அமைப்பினரால் மொத்தமாக தீ வைத்து கொளுத்தப்பட்டன. அவை திபுதிபு என கொழுந்துவிட்டு எரியும் காட்சி, நெஞ்சை பதறச் செய்கிறது.
இதனால் பெங்களூரில் பதட்டம் அதிகரித்திருக்கிறது.