உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: தேதி அறிவிப்பு!

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர்,கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார்.

அதன்படி, உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் பிப்ரவரி 4ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 11-ல் எண்ணப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11-ல் தேர்தல் நடைபெறுகிறது.

பிப்ரவரி 15-ல் 67 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாம் கட்டமாக 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளில் பிப்ரவரி 1-ல் தேர்தல் நடைபெறுகிறது.

4-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் 53 தொகுதிகளில் பிப்ரவரி 23-ல் தேர்தல் நடைபெறுகிறது. 5-ம் கட்டமாக 11 மவட்டங்களில் 52 தொகுதிகளில் பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறுகிறது.

6-வது கட்ட தேர்தல் 7 மாவட்டங்களில் 49 தொகுதிகளில் மார்ச் 4-ல் நடைபெறுகிறது.

இறுதியாக 7 மாவட்டங்களில் 40 தொகுதிகளில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மார்ச் 8-ல் நடைபெறுகிறது.

கோவா

கோவா மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 18. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 20.

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு பிப்ரவரி 8-ல் அறிவிக்கை வெளியாகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 8. அவற்றை திரும்பப்பெற கடைசி நாள் பிப்ரவரி 18. 38 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மார்ச் 4-ல் நடைபெறும்.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிப்ரவரி 11-ல் அறிவிக்கை வெளியாகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 18. அவற்றை திரும்பப்பெற கடைசி நாள் பிப்ரவரி 22. இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 8-ல் நடைபெறும்.

உத்தராகண்ட்

உத்தராகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27, வாபஸ் பெற ஜனவரி 30 கடைசி.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை ஜனவரி 11-ல் வெளியாகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜனவரி 18 கடைசி நாள். திரும்பப்பெற ஜனவரி 21 கடைசி நாள்.