2k லவ் ஸ்டோரி – விமர்சனம்

நடிப்பு: ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், லத்திகா பாலமுருகன், பாலசரவணன், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி.முத்து, வினோதினி வைத்தியநாதன், ஹரிதா, நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்

இயக்கம்: சுசீந்திரன்

ஒளிப்பதிவு: வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணா

படத்தொகுப்பு: தியாகு டி

இசை: டி.இமான்

தயாரிப்பு: ‘சிட்டி லைட் பிக்சர்ஸ்’ விக்னேஷ் சுப்பிரமணியன்

திரையரங்க வெளியீடு: ‘கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ ஜி.தனஞ்ஜெயன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

உலகம் முழுக்க பெரும்பாலான திரைப்படங்களின் ‘எவர்கிரீன் சப்ஜெக்ட்’டாக விளங்குவது நட்பும், காதலும் தான். இவற்றை எல்லா மொழிகளிலும் விதவிதமான கோணங்களில் சித்தரிக்கும் ஏகப்பட்ட திரைப்படங்கள் ஏற்கெனவே வெளிவந்திருக்கின்றன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. இனியும் வெளிவரும். இந்நிலையில், நட்பையும் காதலையும் போட்டு குழப்பியடிக்கும் இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் அவர்களது பெற்றோர்களின் புரிதலுக்காகவும், ரசிப்புக்காகவும் கண்ணியமான ‘2K லவ் ஸ்டோரி’ என்ற இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

நாயகன் ஜெகவீரும், நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயதில் இருந்தே இணைபிரியாத நண்பர்களாகத் திகழ்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணக்கமாக இருந்து வருகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த பிறகு ‘ப்ரி வெட்டிங் போட்டோஷுட்’ நிறுவனம் ஒன்றை கூட்டாகத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

ஒரு ஆணும், பெண்ணும் நட்பாகப் பழகினாலே நாளடைவில் அது காதலாக மாறிவிடும் என்பது நம் சமூகத்தின் பொதுபுத்தி. அந்த வகையில், நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஜெகவீரும் மீனாட்சி கோவிந்தராஜனும் கூட தங்களுக்குத் தெரியாமலேயே உள்ளுக்குள் காதல் கொண்டிருப்பார்கள் என்றும், அவர்களது உறவுக்கு இடையே இன்னொரு நபர் பிரவேசித்தால், அப்போது ‘பொசசிவ்னெஸ்’ தோன்றி, கட்டாயம் காதல் வெளிப்படும் என்று அவர்களது நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஜெகவீர் – மீனாட்சி கோவிந்தராஜன் நட்புறவுக்கு இடையில் லத்திகா பாலமுருகன் பிரவேசிக்கிறார். அவர் ஜெகவீரை காதலிப்பதாக ப்ரப்போஸ் பண்ணுகிறார். இது குறித்து ஜெகவீர் தன் சினேகிதி மீனாட்சி கோவிந்தராஜனிடம் ஆலோசித்து, அவருடைய சம்மதத்துடன் லத்திக்கா பாலமுருகனின் காதலை ஏற்கிறார். இருந்தபோதிலும், மீனாட்சி கோவிந்தராஜனின் மனதுக்குள் ‘பொசசிவ்னெஸ்’ தலை தூக்குகிறது. இதை தெரிந்துகொள்ளும் லத்திகா பாலமுருகன் இது குறித்து ஜெகவீரிடம் கூறுகிறார்.

அதன்பிறகு என்னவெல்லாம் நடந்தது? ஜெகவீர் – லத்திகா பாலமுருகன் காதல் கைகூடியதா, இல்லையா? ‘பொசசிவ்னெஸ்’ஸை கடந்து ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் நண்பர்களாகவே பயணித்தார்களா? அல்லது டிராக் மாறி காதலர்கள் ஆனார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக அறிமுக நடிகர் ஜெகவீர் நடித்திருக்கிறார். புதுமுகம் என்றே தெரியாத அளவில் அவரிடமிருந்து தேர்ந்த நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஜெகவீரும் தனக்கு எது வரும் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப சிறப்பான நடிப்பை செம ஜாலியாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் செய்தால், தமிழ் திரையுலகில் நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம்.

நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவரைப் போல் ஒரு சினேகிதி நமக்கு கிடைக்க மாட்டாரா என்று பார்வையாளர்களை ஏங்க வைத்துவிடுகிறார்.

இரண்டாவது நாயகியாக லத்திகா பாலமுருகன் நடித்திருக்கிறார். அவரது வெகுளித்தனமான முகமும், பேச்சும் ரசிக்க வைக்கின்றன. இடைவேளை ட்விஸ்ட் மூலம் பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறுகிறார்.

பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ், சிங்கம்புலி, ஜி.பி.முத்து ஆகியோர் இங்கும் அங்குமாக நகைச்சுவையைத் தூவி விட்டிருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷ், வினோதினி வைத்தியநாதன், ஹரிதா, நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே காதல் தான் என்று முடிவு செய்யும் நம் சமூகத்துக்கு, ஒரு ஆணும் பெண்ணும் இறுதி வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருக்க முடியும் என்ற அழகிய கருத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதே கருத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் விக்ரமன் தனது பாணியில் ‘புது வசந்தம்’ படத்தில் சொல்லியிருந்தாலும், அதை இன்றைய 2K கிட்ஸ் மற்றும் அவர்களது பெற்றோர்களின் புரிதலுக்காக சுசீந்திரன் தனது பாணியில் – பாடமாக அல்லாமல் ரசிப்புக்குரிய படமாக – சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கது. பாராட்டுக்கு உரியது.

வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, தியாகுவின் படத்தொகுப்பு, இமானின் இசை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்தை உயர்த்திக் காட்ட உதவியுள்ளன.

‘2K லவ் ஸ்டோரி’ – இக்கால இளைஞர்களைப் பெருமைப்படுத்தும் பொழுதுபோக்கு திரைப்படம்; தாராளமாக பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3/5