‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!
2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் 23 இந்திய மொழிகளுக்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில் சிறந்த கவிதைத் தொகுப்புகளுக்காக 9 விருதுகளும், சிறந்த நாவல்களுக்காக 6 விருதுகளும், சிறுகதைத் தொகுப்புகளுக்காக 5 விருதுகளும், கட்டுரைத் தொகுப்புகளுக்காக 3 விருதுகளும் சிறந்த இலக்கிய விமர்சனத்துக்காக ஒரு விருதும் கிடைத்துள்ளன.
அந்த வகையில் தமிழ் மொழிக்கான விருதுக்கு தேவிபாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எளிய மனிதர்களாகிய நாவிதர் சமூகத்தின் வாழ்வியலை தன்னுடைய ‘நீர்வழிப் படூஉம்’ என்ற இந்த நாவல் மூலம் பதிவு செய்துள்ளார் தேவிபாரதி.
இவரது இயற்பெயர் ராஜசேகரன். திருப்பூர் மாவட்டம் புதுவெங்கரையாம்பாளையத்தில் 1957-ம் ஆண்டு பிறந்தவர். தமிழக கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மக்களின் வாழ்வியலை எதார்த்த நடையில் எழுதி வரும் தேவிபாரதி, ஏற்கெனவே நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். தற்போது சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ‘நீர்வழிப் படூஉம்’ இவரது மூன்றாவது நாவலாகும்.
இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்காக தமிழ் மொழி பிரிவில் தமிழவன் எழுதிய ஆடிப்பாவைபோல (நாவல்), சுப்ரபாரதிமணியன் எழுதிய அந்நியர்கள் (நாவல்), மாலன் எழுதிய என் ஜன்னலுக்கு வெளியே (கட்டுரைத் தொகுப்பு), கவிப்பித்தன் எழுதிய ஈமம் (நாவல்), பா.கண்மணி எழுதிய இடபம் (நாவல்), தேவிபாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ (நாவல்), பக்தவத்சலபாரதி எழுதிய பண்டைத்தமிழ்ப் பண்பாடு, இரா.முத்துநாகு எழுதிய சுளுந்தீ உள்ளிட்ட 15 படைப்புகள் இறுதிச் சுற்றில் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டன.
இவைகளில் இருந்து தேவி பாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ (நாவல்) இறுதியாக இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. தமிழ் மொழி விருதுக்குரிய படைப்பை தேர்வு செய்யும் குழுவில் முனைவர் ம.இராசேந்திரன், முனைவர் க.செல்லப்பன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை, செப்பு பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். இவ்விருது வரும் மார்ச் 12-ம் தேதி புதுடெல்லியில் வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள எழுத்தாளர் தேவிபாரதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.