“2 விதமான 500 ரூபாய் நோட்டுகளை மோடி அரசு வெளியிட்டது மிகப் பெரிய ஊழல்!”

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளை மோடியின் மத்திய அரசு வெளியிட்டது நாட்டின் மிகப் பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நிலவியது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசும்போது, “மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளோம். புதிதாக வெளியிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் 2 வித அளவு, வடிவமைப்புகளில் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்று ஆளும் (பாரதிய ஜனதா) கட்சியினருக்கானது, மற்றொன்று மற்றவர்களுக்கானது” என்றார். அப்போது அவர் இரு வேறு விதமான ரூபாய் நோட்டுகளை அவையில் காண்பித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசும்போது, “இது நாட்டின் மிகப் பெரிய ஊழல். எனவே, 5 நிமிடம்கூட ஆட்சியில் தொடர இந்த அரசுக்கு உரிமை இல்லை” என்றார்.

இதனிடையே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “பூஜ்ஜிய நேரத்தில் எவ்வித நோட்டீஸும் வழங்காமல் அற்பமான பிரச்சினைகளை எழுப்புகிறீர்கள். பதிலை பெற வேண்டும் என்ற நோக்கமின்றி அமளியை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரச்சனை எழுப்புகிறீர்கள். அவை விதி முறைப்படி எந்த ஒரு தாளையும் இங்கு காட்டக் கூடாது. ரூபாய் நோட்டு பற்றி பொறுப்பற்ற தகவலை கூறுகிறார்கள். பூஜ்ஜிய நேரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

இதையடுத்து, டெரிக் ஓ பிரயன் ( திரிணமூல் காங்கிரஸ்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாதி) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். பின்னர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அமளி நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதனால் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட அவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.