‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் பங்கேற்பது எப்போது?
லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ரஜினி நடித்த ‘கபாலி’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதனால் ‘2.0’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.
தற்போது சென்னை அயனாவரம் ஜாய்ன்ட் ஆபீஸ் ரெயில்வே அலுவலகத்தில் ‘2.0’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரெயில்வே அலுவலகத்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றி, ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் இல்லாமல், ஏனைய நடிகர் – நடிகைகளை வைத்து இப்படப்பிடிப்பை பலத்த பாதுகாப்புடன் நடத்தி வருகிறார்கள்.
ரஜினி இம்மாதம் (ஆகஸ்டு) 22ஆம் தேதிக்கு மேல் ‘2.0’ படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.