தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி பறிப்பு: சபாநாயகர் நடவடிக்கை!
தமிழக முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால்.
பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மனு கொடுத்த நிலையில், அவர்களிடம் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 19 பேரில் ஜக்கையன் மட்டும் அணி மாறி பழனிசாமி பக்கம் சாய்ந்ததால், அவரை தவிர மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர்.
சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் விவரம்:
1.தங்க தமிழ்செல்வன், 2.ஆர்.முருகன், 3.மாரியப்பன் கென்னடி, 4.கதிர்காமு, 5.ஜெயந்தி பத்மநாபன், 6.பழனியப்பன், 7.செந்தில் பாலாஜி, 8.வெற்றிவேல், 9.எஸ்.முத்தையா, 10.என்.ஜி.பார்த்திபன், 11.கோதண்டபாணி, 12.பாலசுப்ரமணி, 13.ஏழுமலை, 14.ரங்கசாமி, 15.தங்கதுரை, 16.எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணி, 17.ஆர்.சுந்தர்ராஜ், 18.கே.உமா மகேஷ்வரி.
மைனாரிட்டி பழனிசாமி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.