வாக்கெடுப்பு மற்றும் 18 தொகுதிகளில் இடை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, அரிமா சுந்தரம் உள்ளிடோர் ஆஜராகி வாதாடினர். தினகரன் தரப்புக்கு ஆதரவாக துஷ்யந்த் தவேவும், சபாநாயகர் தரப்புக்கு ஆதரவாக அரிமா சுந்தரமும் வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி என்று அறிவிக்கக் கூடாது என்றும், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பையும் ஏற்க முடியாது என்றும் மறுத்துவிட்டார்.

மேலும், ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது என்ற தடை, மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்று தெரிவித்த நீதிபதி , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவை செயலர் பூபதி, அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வரும் அக்.4 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.