2023ஆம் ஆண்டு 10 மாநில சட்டப்பேரவை தேர்தல்: கட்சிகளுக்கு பெரும் சவால்!

புதிதாக பிறந்துள்ள 2023ஆம் ஆண்டு, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது. காரணம் புதிய வருடத்தில் வரவிருக்கும் 10 மாநில சட்டப் பேரவை தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இவற்றில் வெல்லும் கட்சி மீது மக்களின் ஆதரவு அலை வீசும் என்பது தேசிய அரசியலின் நம்பிக்கையாக உள்ளது.

கடந்த 2014-ல் ஒன்றிய அரசுக்கு தலைமை ஏற்றது முதல் மாநிலங்களின் அளவிலும் பாஜக வளர்ந்தது. 29 மாநிலங்களில் 20-ல் நேரடியாகவும், கூட்டணி அமைத்தும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த இந்த ஆட்சிகளில் தற்போது சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றியது. அதற்கு முன் பீகாரில் நிலவிய பாஜக கூட்டணி ஆட்சியும் கைநழுவியது. எனினும், சிவசேனா கட்சியின் பிளவால் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

ஹரியானா, நாகாலாந்து, மேகாலயா மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி நிலைமையும் தற்போது சரியில்லாத நிலை தெரிகிறது. இதன் காரணமாக சுமார் 15 மாநிலங்களில் மட்டும் பாஜகவின் ஆட்சி பிரச்சினையின்றி தொடர்கிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நிலவுகிறது.

இந்நிலையில் 2023-ல் திரிபுரா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலமான கர்நாடகா, அக்கட்சிக்கு பெரும் சவாலாகி விட்டது. இங்கு சர்ச்சைகளுக்கு இடையே அமைந்த பாஜக ஆட்சி மீது பெரும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா இடையிலான மோதலும் பாஜகவை சோதனைக்கு உள்ளாக்கி விட்டன. ரெட்டி சகோதரர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு புதிதாக உதயமான கல்யாண் பிரகதி கட்சி பாஜகவுக்கு இழப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் தேர்தல் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான மோதல் காங்கிரஸுக்கு நிரந்தரத் தலைவலியாக உள்ளது. ம.பி.யில் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பது பாஜகவுக்கு பெரும் சவாலாகி விட்டது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கு இடையிலான மோதல் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸை சேர்ந்த முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் டி.எஸ்.சிங்தேவுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக மற்றும் இடதுசாரிகள் இடையே நேரடி மோதல் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அருகிலுள்ள மேகாலயாவில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்ற போதும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனால் அம்மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியுடன் (என்பிபி) இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. இந்தமுறை, என்பிபி கட்சி, மம்தா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடத் திட்டமிடுகிறது. நாகாலாந்தின் 60 தொகுதிகளில் அதிகபட்சமாக 12 தொகுதிகள் மட்டுமே பெற்ற பாஜக, அங்கு மேலும் வளரவேண்டி உள்ளது.

இந்த 10-ல் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டியே நிலவ உள்ளது.

எனவே 2024 மக்களவைத் தேர்தல் போட்டியில் முக்கிய அங்கம் வகிக்க காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல வாய்ப்பாக உருவாகி விட்டது. இவற்றில், பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு கிடைக்கும். இல்லையெனில் நாட்டின் வலிமையான ஒரே அரசியல் கட்சியாக பாஜக உருவாகி மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடருவதை எவராலும் தடுக்க முடியாது.