“காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்!” – 10 லவ் டிப்ஸ்

1.காதல்னா, ஒருத்தரை ஒருத்தர் மெய்மறந்து காதலிக்கிறதுன்னு நினைக்கிறீங்களா? அது அந்தக் காலம் பாஸ்!தன்னோட காதல் தெரிவு தப்பானதுன்னு ஒருத்தர் உணர்கிற பட்சத்தில, அந்தக் காதலை ரத்து செய்றாங்கன்னு வச்சுப்போம். அப்போ அதை மனமுவந்து ஏற்கிற பக்குவம் எல்லாத்துக்கும் இருக்கணும். ஏன்னா காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்.

2.பொதுவாக பாத்தீங்கன்னா, காதல் வயப்படும் ஆண்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா? தன்னைக் காதலிக்கிற பெண்கள் தன்னோட கருத்துக்களை காது கொடுத்து கேக்குறதைத்தான் விரும்புவாங்கன்னு நினைக்கிறாங்க. இல்ல சார். ஓபனிங்கிலயே நீங்க் அவுட்டாயிட்டீங்க! ஏன்னா, எல்லாப் பெண்களும் என்ன நினைக்கிறாங்கன்னா தன்னோட பேச்சு, மனசு இரண்டையும், மனதையும் காதையும் கொடுத்து கேட்கிற ஆண்களைத்தான் விரும்புறாங்க! இந்த உலகம் ஆணாதிக்கமா இருக்கும்போது ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இப்படித்தான சிந்திக்க முடியும்!

3.பணத்தை முக்கியமா நினைக்கும் காதலால, அதாவது ஸ்டேட்டஸ், வருமானம், நல்ல வேலைன்னு கணக்கு போடும் காதலால இந்த உலகத்துல பிட்சா வியாபாரமும், மல்டிபிளக்ஸ் பிசினசும் தான் வளரும். குணத்த முக்கியமா நினைக்கும் காதல்தான் சமூகத்தோட தரத்த வளர்க்கும்.

4.சாதி பாத்து காதலிச்சா, அதுக்குப் பெயர் அரேஜன்டு லவ். சாதி பாக்காம காதலிச்சா அதுக்குப் பேர்தான் அழகுக் காதல்! மனுசங்களா வாழும்போது அதுல சாதி, மதம்னு சறுக்கி விழுந்தா சங்கடம் சமூகத்துக்குத்தான்!

5.காதலிகளை தெரிவு செய்யும் ஆண்கள் வைச்சிருக்கிற பட்டியல் என்ன தெரியுமா? தான் காதலிக்கிற பெண் வயசுல, படிப்பில, வருமானத்துல தன்னை விட குறைவா இருக்கணும். ஆனா அழகுல மட்டும் ஊரே பாத்து அதிசயப்படணும். ஆனா பாருங்க, காதல்ங்கிறது கூட்டிக் குறைச்சு பாக்குற வட்டிக் கடை கணக்கு இல்லைங்க!

6.காதலிப்போம், ஊரைச் சுற்றுவோம், அப்பா அம்மா ஒத்துக்கிட்டா கல்யாணம் செய்வோம், ஒத்துக்கலைன்னா குட் பை சொல்லிட்டு வீட்ல சொல்றபடி திருமணம் செய்வோம்! இதுக்குப் பெயர் காதலா, கண்றாவியா, நீங்களே சொல்லுங்க!

7.பொதுவா பெண்கள் என்ன நினைக்கிறாங்க? தன்னை காதலிக்கும் ஆண் தன்னை புரிஞ்சிக்கணும், தன்னை பாத்துக்கணும், தன்னோட குடும்பத்த ஏத்துக்கணும், அப்டின்னுதான் யோசிக்கிறாங்க. ஆனா மை டியர் லேடிஸ், காதல் – திருமணங்கிறது ஒரு செக்கியூரிட்டி பிரச்சினை இல்லப்பா. உங்களோட தன்மானம், சுயமரியாதை, சமத்துவம் சம்பந்தப்பட்டது! அதனால நீங்க சொந்தக் கால்ல நின்னுகிட்டு காதலிச்சீங்கன்னா, அதாவது படிப்பு, வேலை, வருமானம்னு நீங்க நிக்கும்போது செக்யூரிட்டி பிரச்சினை அவ்வளவா இருக்காது! சொல்லப் போனா, அப்பதான் உங்க காதல் தேடுதல் சுதந்திரமா நடக்கும்!

8.தமிழ் சினிமா ஹீரோக்கள ரசிக்கிற ஆண்கள் காதலைப் பத்தி என்ன நினைக்கிறாங்க? ஒரு பெண்ணுங்கிறவ ஒரு ஆணால் துரத்தப்பட்டு, வேட்டையாடப்பட்டு, வீழ்த்தப்படும் விலங்குன்னு நினைச்சாங்கன்னா, அவங்ககிட்ட இருக்குற வியாதி பேர் கொலைகார காதல்! இந்த வியாதி உள்ளவங்கதான் ஆசிட், பெட்ரோல்னு நியூசுல கொடூரமான கதைங்களயும் காட்சிகளயும் காட்டுறாங்க!

9.தான் காதலிக்கிற பெண்ணோட மடியல படுத்து தூங்கணும், அவ தன்னோட தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் சொல்லணும், குறிப்பறிஞ்சு காஃபி கொடுக்கணும், ஃபோன் பண்ணனும், தலைவலி மாத்திரை கொடுக்கணும், தன்னை பாக்கலேன்னா அவளுக்கு தூக்கமே வரக் கூடாது, ஐந்து நாளு பாக்காம ஆறாவது நாளு பாத்தா அப்படியே பாசத்துல குமுறி அழணும்……… இப்படி பல ஜெமினிகணேசன் காலத்து பாய்ஸ் யோசிக்கிறாங்க! தம்பிங்களா, காதல்ங்கிறது ஒரு பெண்ணோட அடிமைத்தனமில்லப்பா, அது இரண்டு பேரும் சமத்துவமா சுதந்திரமா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறது!

10.ஆடம்பரமான பரிசுப் பொருட்கள், செல்போன்ல தவமிருக்கிறது, உலகத்துல நடக்குற நல்லது கெட்டதுகளை கண்டுக்காம காதல்ல மட்டுமே வாழ்றது, மல்டிபிளக்ஸ்ல நாலு டிஜிட்டில்ல செலவு பண்ணறது… இது மாதிரி ஜோடனைங்களால காதலுக்கு எந்த பயனுமில்லை. சொல்லப்போனா, அது காதலாங்கிறது சந்தேகம்தான். காதலுங்கிறது அடக்கமா, கண்ணியமா, அழகா, அமைதியா ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கிற பூங்கா! அந்த பூங்காவை யாரு கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்!

நன்றி: வினவு டாட்காம்